நவம்பர் 1 அன்று “நகர சபை”, “மாநகர சபை” கூட்டங்கள் - மநீம வரவேற்பு

 
kamal hassan

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 21.02.2022 அன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்  தலைமை செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன் 12 ஆண்டுகளுக்கு முன் சட்டமியற்றப்பட்டு இன்னமும் நடைமுறைக்கு வராத ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தார்.

tn

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி மலர ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கமல் ஹாசன் வலியுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து தமிழகமெங்கும் உள்ள மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலாளர்கள், அந்தத்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களிடமும் இதற்கான மனுக்கள் வழங்கப்பட்டன.


இந்த சூழலில் தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதைப் போன்று முதன்முறையாக நகர சபை  மற்றும் மாநகர சபைக்  கூட்டம் நடைபெற உள்ளது. பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6வது வார்டு நகர சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று  மக்கள் குறைகளை கேட்கஉள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நகர சபை”, “மாநகர சபை” கூட்டங்கள் (கிராம சபைகளைப் போல) முதன்முதலாக நவம்பர் 1 அன்று நடத்தப்படவுள்ளது  வரவேற்புக்குரியது. கடந்த பிப்ரவரி 21 அன்று தலைவர் கமல் ஹாசன் அவர்கள், தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இச்சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளது.