செஸ் ஒலிம்பியாட் போட்டி - இன்று மாமல்லபுரம் செல்லும் முதலமைச்சர்!!

 
tn

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு  மாமல்லபுரம் இன்று செல்லும் முதலமைச்சர் ஏற்பாடுகளை பார்வையிடுகிறார்.

tn

இந்தியாவில்  முதல்முறையாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.  44வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட் ரிசார்ட்  5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.  இதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். 

tn

187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்க உள்ள நிலையில்,  இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் மூன்று அணிகளும், மகளிர் பிரிவில் மூன்று அணிகளும் பங்கேற்க உள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடைபெறுகிறது.  இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 3 மணியில் இருந்து இந்திய பண்பாட்டையும் , கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில்,  மாலை 6 மணி அளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி  இப்போட்டியினை தொடங்கி வைக்கிறார். 

tn

இந்நிலையில்  ஒலிம்பியாட்  போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முன்னேற்பாடுகளை பார்வையிடுகிறார். 52 ஆயிரம்  சதுர அடியிலும் 22,000 சதுர அடியிலும் விசாலமான அரங்குகள் அமைக்கப்பட்டு நவீன கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இதனால் ஒலிம்பியாட் போட்டி முடியும் வரை 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.