செஸ் ஒலிம்பியாட் : போட்டியில் பங்கேற்காமல் திரும்பிச் சென்ற பாகிஸ்தான் வீரர்கள்...

 
செஸ் ஒலிம்பியாட் : போட்டியில் பங்கேற்காமல் திரும்பிச் சென்ற பாகிஸ்தான் வீரர்கள்...

 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக  சென்னை வந்த , 19 பாகிஸ்தான் நாட்டு செஸ் வீரர்கள் திடீரென போட்டியில் பங்கேற்காமல்  புறப்பட்டுச் சென்றனர்.  
 
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.  நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  தொடக்க விழாவில் போட்டியில் பங்கேற்கும்  நாடுகள் மற்றும் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.  பிரதமர் மோடி பங்கேற்று போட்டியினை தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் 189 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.    அந்தவகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள்  19 பேர், 44வது செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை புனேவிலிருந்து -  சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

செ ஒலிம்பியாட்

தமிழ்நாடு அரசு அதிகாரிகளும், ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் அவர்களை வரவேற்றனர்.  பின்னர் அனைவரும் சொகுசு வாகனங்கள் மூலம்  சென்னை ஓஎம்ஆர் சாலை, சிறுசேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.   இந்நிலையில் , நேற்றிரவு திடீரென அவர்கள் 19 பேரும்  சிறுசேரி நட்சத்திர விடுதியிலிருந்து சென்னை  விமான நிலையம் சென்றுள்ளனர். பின்னர்  அங்கிருந்து இரவு 11 மணியளவில்  புனே செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், புனேவுக்குத்  திரும்பிச் சென்றனர்.  

சென்னை விமான நிலையம்

அதிகாரிகளே பாகிஸ்தான் செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேரையும்  விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.   இந்நிலையில்  பாகிஸ்தான் நாட்டு அரசு, அவர்களை செஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், ஆகையால் அவர்கள் அனைவரும்  போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்று விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.