செஸ் ஒலிம்பியாட் - வரவேற்பு டீசர் வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்!

 
chess

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகXஸ்ட் 10ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில், 188 வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.

செஸ் போட்டி பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட்ஸ் விடுதியில் உள்ள அரங்கத்தில் நடைபெற உள்ளது. மாமல்லபுரம் நகரப்பகுதி மற்றும் ஈசிஆர் சாலையையொட்டி உள்ள தனியார் சொகுசு விடுதிகளில் விளையாட்டுவீரர்கள்  தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விளையாட்டு நடைபெறும் அரங்குகள் அமைக்கும் பணி  ,மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள், கழிவறை வசதிகள், மின்சாரம் மற்றும் சிசிடிவி போன்ற அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இப்போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும், 44 வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனை எதிர்வரும் 28 ஆம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். போட்டிக் குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.