இனி பரந்தூர், ஆவடி வரை மெட்ரோ ரயில்.. சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டம் நீட்டிப்பு..

 
metro


சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தை மேலும் 93 கி.மீ தூரம் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பூவிருந்தவல்லி வரையிலான 4வது வழித்தடம்  பரந்தூரில் அமையுள்ள புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும்,  சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்  2வது கட்ட மெட்ரோ  பணிகள் மிக வேகமாக நடைபெற்ற வருகின்றன.  ரூ. 60 ஆயிரத்து  180 கோடி  செலவில் 118. 9 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த திட்டம் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

metro

இதன்படி 3வது வழித்தடம் மாதவரம் - சிறுசேரி வரையில் 45. 8 கி.மீ  நீளத்திற்கு அடையாறு, மயிலாப்பூர்,  புரசைவாக்கம் வழியாகவும்,  4வது வழித்தடம் கலங்கரை விளக்கம் -  பூந்தமல்லி வரை 26. 1 கி.மீ நீளத்திற்கு தி. நகர்,  வடபழனி,  போரூர் வழியாகவும்,  ஐந்தாவது வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்திற்கு வில்லிவாக்கம், ராமாபுரம்,  மேடவாக்கம் வழியாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மெட்ரோ ரயில் 2வது கட்ட  திட்டத்தை மேலும் 93கி.மீ  தூரத்திற்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.   அதன்படி 4வது வழித்தடம் ( கலங்கரை விளக்கம்  - பூந்தமல்லி )  புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் வரை 50 கி.மீ  தூரத்திற்கு நீட்டிக்கப்பட உள்ளது. அதேபோன்று 3வது வழித்தடம் சிறுசேரியிலிருந்து   கேளம்பாக்கம், மாம்பாக்கம்,  வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும் ,   5வது  வழித்தடத்தில் திருமங்கலம் -  ஆவடி வரையிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

metro

இவ்வாறு  நீட்டிப்பு செய்வதற்கான  விரிவான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அளிக்க   விரைவில் ஆலோசகர்  நியமிக்கப்படுவார்கள் என  மெட்ரோ ரயில்  நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    கூட்ட நெரிசல் அளவு,  அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடங்களில் பயணத் தேவை,  மதிப்பிடப்பட்ட செலவு,  தேவைப்படும்  பொது மற்றும் தனியார் நிதி,  சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பல்வேறு அம்சங்கள் ஆகியவை அடிப்படையில் அந்த அறிக்கை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .