ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் சென்னை மாநகராட்சி கட்டிடம்! ஏன் தெரியுமா?

 
Chennai corporation

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ரிப்பன் கட்டடம் ஆரஞ்சு நிற வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது. 

Image

நிர்பயா திட்டங்களின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பாலினப் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை அறிந்து கொள்ளும் வகையில் மாநகரம் முழுவதும் கருத்தாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் மூலம் சென்னையில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் கலந்து கொள்ளும் இரவு நேர சைக்கிள் பயண நிகழ்ச்சி' மற்றும் பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பயிற்சி வகுப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் 25 முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை 16 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான பாலின வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி பங்கேற்க உள்ளது. 


இதனை வெளிப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரிப்பன் கட்டடம் மற்றும் நேப்பியர் பாலம் இன்று, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 10 ஆகிய 3 நாட்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படுகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஐக்கிய நாடுகள் சபை ஆரஞ்சு நிறத்தை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை இல்லாத பிரகாசமான எதிர்காலத்தின் அடையாளமாக தேர்ந்தெடுத்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.