டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல் பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம்- ஐகோர்ட்

 
Highcourt

டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறும் திட்டத்தை கொண்டுவரலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

Madras High Court in Chennai - Chennai Madras High Court, Places to Visit  in Chennai

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம் என்றும், அதன்மூலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் தடுக்க முடியும் என யோசனை தெரிவித்தனர். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது போன்ற ஆலோசனைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை மூலம்  வழங்கி, கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் தெரிவித்தனர். பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தும் வகையில், மாற்று பொருட்களை பயன்படுத்தும்படி ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் மத்திய மாநில அரசு தரப்பிடம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாற்று பொருட்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். தமிழக அரசு தரப்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், மத்திய அரசு தரப்பில் பிளாஸ்டிக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உணர்வதாகவும், முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள்,  பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் மட்டும் தான் அமலில் உள்ளதே தவிர, பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை யார் உறுதி செய்வார்கள் என்றும், யார் பொறுப்பான அதிகாரி எனவும் தெரிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து விட்டு, அதை புழக்கத்தில் விட்டபிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா என மத்திய மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.