பிரியா மரண வழக்கு - மருத்துவர்கள் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

 
Madras Court

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை காவல்துறையிடம் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நேற்று  ஒப்படைத்துள்ளது.   அந்த அறிக்கையில் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே கால்பந்து வீராங்கனை பிரியா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த  மருத்துவர்கள் பால்ராம் சங்கர்,  சோமசுந்தரம் தவிர மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்,  செவிலியர்கள்,  பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே   கவனக்குறைவாக செயல்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்திருக்கிறது. மருத்துவக் கல்வி இயக்குனரக அறிக்கையை  அடிப்படையாக வைத்து இயற்கைக்கு மாறான மரணம் என போடப்பட்டிருந்த வழக்கு, மாற்றப்பட்டு  அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்னும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.  மேலும், மருத்துவ கல்வி இயக்குனராக அறிக்கையை சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி வைத்து,  இந்த வழக்கில் கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் சேர்க்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.   வழக்கு பதிவு மாற்றப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்திருக்கிறது.   முதல் கட்டமாக மருத்துவர்கள் இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில்,  அந்த சம்மனை பெற்றுக் கொள்ளாமல் மருத்துவர்கள்  தலைமறைவாகும் பட்சத்தில் இருவரையும் கைது செய்யவும் தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

priya football

இந்நிலையில், மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராமசங்கர் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களது மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இன்று விசாரிக்கிறார். பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக இரண்டு பேரும் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர். மருத்துவ குழுவினரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார் எனவும், சாட்சிகளை கலைக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில், அவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனிடையே பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.