சென்னை புத்தக கண்காட்சி- சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானம் செய்த கனிமொழி எம்பி

 
கனிமொழி

புத்தகம் படிக்கும் பழக்கம் சிறைவாசிகளுக்கும் அவசியம் எனும் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப்ஸபொதுச்செயலாளருமான கனிமொழி, சிறைவாசிகளுக்காக புத்தகங்களை பரிசளித்துள்ளார்.

சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சி வளாகத்திற்கு வந்த கனிமொழி, தமிழக சிறைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த புத்தக அரங்கை பார்வையிட்டார். அப்போது பெரியாரின் சிந்தனைகள், கலைஞரின் குறளோவியம் உள்ளிட்ட மிகச்சிறந்த  150 நூல்களை, சிறைத்துறை துணைத் தலைவர் கனகராஜிடம் வழங்கினார். அந்தப் புத்தகங்களை சிறைவாசிகளிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “பொதுவாக புத்தகங்கள் தான் ஒரு மனிதனுக்கு புதிய பரிணாமத்தை கொடுக்கும் என்பதில், தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தந்தை பெரியார் உள்ளிட்ட உலகில் தலைசிறந்த தலைவர்கள் எல்லாம் புத்தக வாசிப்பாளர்கள் தான். சிறையில் உள்ள நபர்கள் அவசியம் புத்தகம் படிக்க வேண்டும். சிறை கைதிகளுக்கு புத்தகம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில், 150 புத்தகங்களை வழங்கியுள்ளேன். அனைவரும் அவசியம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.