சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு : சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட்..

 
savukku


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு  எதிராக சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்த நிலையில்,  சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நீதித்துறை குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  இதன் காரணமாக சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. அதன்படி  சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டார். பின்னர் நிர்வாக காரணங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக,  மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர்  கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

supreme court

பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு  நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும்,  சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள்  உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர், ட்விட்டர், ஃபேஸ்புக், யுடியூப், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர்  ஆகியோர் பதிலளிக்குமாரும்  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.