கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை

 
savukku savukku

சென்னை எழுப்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சவுக்கு சங்கர். கடந்த 2008ஆம் ஆண்டு அதிகாரிகள் பேசி கொண்ட ஆடியோவை ஊடகங்களுக்கு கசியவிட்ட விவகாரத்தில் சங்கர் கைது செய்யப்பட்டார். இதனால் சங்கரை பணியிடை நீக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து வெளியே வந்த சவுக்கு சங்கர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து செப்டம்பர் 15ஆம் தேதி அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

savuku sankar


 
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு கடந்த 11-ம் தேதி விசாரித்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு காவல்துறை கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் கடந்த 11-ஆம் கைது செய்தது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனை வழங்கியும் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.