சதுரகிரி மலை : நள்ளிரவில் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்..

 
சதுரகிரி மலை :  நள்ளிரவில் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்..

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டனர்.  நள்ளிரவில் அவர்களை கயிறு மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.  

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற   சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும்  மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.  ஒவ்வொரு மாதமும்  விசேஷ நாட்களில் இந்தக் கோயிலுக்கு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அந்தவகையில்  நேற்று ஆடி அமாவாசையை ஒட்டி  கோயில் நடை திறக்கப்பட்டது.

ஆடி மாத  பூஜை – சதுரகிரி மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!

முன்னதாக  ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை  திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி  விழா நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு   ஜூலை 25முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.  அதன்படி ஆடி அம்மாவாசை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். தரைமட்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் வரை தொலைவில் உள்ள மலைக்கோயிலில்  பக்தர்கள் தங்க  அனுமதியில்லை என்பதால் மலையடிவாரத்துக்கு இறங்கி விடுவர்.

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை!

இரவில் திடீரென மழை பெய்ததால்  ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதில் தரிசனம் முடிந்து மலையடிவாரத்துக்கு வந்த 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி கொண்டனர்.ஆண்டிபட்டி பகுதியின் வழியாக யானைகஜம் என்ற பகுதியில் சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி  கூச்சலிட்டுள்ளனர்.  அப்போது அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசார் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  பின்னர் நிகழ்விடத்திற்கு  விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி கொண்ட  200 பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.  தொடர்ந்து மழை வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் பக்தர்கள் மலைப்பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.