திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. - சென்னை வானிலை மையம் அறிவிப்பு..

 
Rain

 திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (22.11.2022)  மத்தியமேற்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று (23.11.2022) காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்  நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று  ( 23.11.2022) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை

நாளை ( 24.11.2022)  முதல் 27.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.