ஊழல் வழக்கில் வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுவதா?? - மநீம கண்டனம்..

 
mnm

டெண்டர் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக  மத்திய அரசு வழக்கறிஞர்  வாதிடுவதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.  

கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக டெண்டர் வழங்கிய புகாரில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்  மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.  அப்போது மதிய அரசு வழக்கறிஞர் ராஜு,  எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகினார். இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  

velumani

 வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கும் நிலையில்,  வருமானவரித்துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதேநேரம்  மத்திய அரசின் அனுமதி பெற்றே குற்றம் சாட்டப்பட்டிருக்கும்,  வேலுமணிக்கு ஆதரவாக தான் ஆஜராகுவதாக மூத்த வழக்கறிஞர் ராஜூ தெரிவித்ததும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  . இந்த நிலையில்  இதற்கு மக்கள் நீதி மய்யம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Highcourt

இதுகுறித்து அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; “டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர்(Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை. அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை குறித்தான வழக்குகளில் வருமானவரித்துறைக்காக வாதிடும் வழக்கறிஞர் ஒருவர் அமைச்சருக்கு ஆதரவாக வாதாடுவது முரண்பாடான நிலைப்பாடாகும். இதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும். மேலும், அனைத்து வழக்குகளிலும் எதிர்கட்சியினர், கூட்டணிக்கட்சியினர் என்ற பாகுபாடு இல்லாமல் “நீதியின் பாதையில்” வழக்குகள் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்யவேண்டும்”  என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.