சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.20 - ரூ25 வரை உயர்வு..
இந்தியா முழுவதும் சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ. 25 வரை ராம்கோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதிலும் தென் மாநிலங்களில் சுமார் 70 ரூபாய் வரை சிமெண்ட்விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

நாட்டில் கட்டுமானத் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. வீடுகள், பல அடுக்குமாடி கொண்ட அப்பார்ட்மென்ட்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் என திரும்பும் இடங்களில் எல்லாம் கட்டிடங்களாகவே காட்சியளிக்கின்றன. புதிதாக வீடு கட்டுவது, இருக்கும் வீட்டை பெரிது படுத்துவது என கட்டுமானத் தொழிலுக்கு ஓய்வு என்பதே இல்லை.. அப்படி இருக்கையில் கட்டுமான பொருட்களை விலை உயர்வு என்பது பலரையும் பாதிக்கச் செய்கிறது. ஆம் . நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியா முழுவதும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு போன்றவை சிமெண்ட் விலை உயர காரணம் என ராம்கோ நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

சிமெண்ட் மூட்டை விலை அதிகபட்சமாக மூட்டைக்கு 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. சிமெண்ட் தேவை அதிகரித்திருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது., ஆனால் அப்படி எதுவும் இல்லை, இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று என ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கூறுகின்றனர். முன்பு சிமெண்ட் புக் செய்தால் ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும் என்றும், இப்போது டெலிவரி செய்ய காலதாமதம் செய்வதாகவும் கூறும் அவர்கள், இதைக் காரணம் காட்டி நிறுவனங்கள் சிமெண்ட் மீதான தேவை அதிகரித்துள்ளது, விலையை உயர்த்துகிறோம் என்று கூறுவதாக தெரிவிக்கின்றனர். சிமெண்ட் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள் விலை எதுவும் உயர்த்தப்படாத போது சிமெண்ட்டின் விலை மட்டும் உயர்த்துவது எந்த விதிதத்தில் நியாயம் என்று கேட்கும் கட்டுமான தொழில் செய்வோர், சிமெண்ட் விலை சில்லறையில் மூட்டைக்கு 400 ரூபாய் விற்கப்படுவதாக கூறுகின்றனர்.


