சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி - கஸ்தூரி சங்கர்

 
ka

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை அடிப்படையிலானதாக மட்டுமே இருக்க வேண்டும்.  முதல் தலைமுறையினருக்கு சிறப்பு சலுகைகள், மாற்றுத்திறனாளிகள், ராணுவம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி, உண்மையில் உதவி தேவைப்படுபவர்களை கொள்ளையடிக்கும் அரசியல் மோசடி என்கிறார் நடிகை கஸ்தூரி சங்கர்.

su

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று இரண்டு விதமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  அதன்படி, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் ஒரு தீர்ப்பையும், மற்ற 3 நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.  இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் தீர்பளித்திருக்கின்றனர்.  

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.  ஆனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா சாதிகளிலும் உள்ள ஏழைகளுக்கில்லை. உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும்தானாம். அப்படியென்றால், இது எப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்ட தீர்ப்பாகும்?  சாதி அடிப்படையிலான பொருளாதார அளவுகோல் என்பது சமத்துவத்தை மறுக்கிறது என்றே இருவர் செல்லாதென கூறியுள்ளனர்.பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது. இது உச்ச அநீதி. இதனை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்கிறார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி சங்கர், மேற்கண்டவாறு டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.