அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு - எஸ்.பி.வேலுமணி மீது வழக்குபதிவு

 
sp velumani

அரசுக்கு ரூபாய் 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

velumani

கோவையில் முன்னாள் அமைச்சரும்,  அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு சுமார் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  புதிய வழக்கின் அடிப்படையில் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

RAID TTN

தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.