போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

 
Highcourt

காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

Madras High Court raps Election Commission of India, refuses to gag media  on oral observations | Cities News,The Indian Express

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக  அருண்குமார் என்பவரை தேடி,  காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டிற்குள் கால்துறையினர் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியதால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி, அவரது உறவினர் கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரேத பரிசோதனை நடத்த மருத்துவர் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி செம்புலிங்கத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் டிஎஸ்பி தலைமையில் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தவும், 3 மாதங்களில் விசாரணையை முடித்து, வழக்கின் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.