சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதிக்கக்கோரிய வழக்கு- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 
super saravana stores

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில்  மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.


மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. அருகிலேயெந் தனியார் ஆம்னி பேருந்து நிலையமும் உள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன.  இந்த வணிக வளாகத்திற்கு ஆட்டோக்களில் வருபவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்படாததால், ஆட்டோக்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டு, அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


சாத்தையார் அணையின் உபரி நீர் வரும் வரத்து கால்வாய் சரவணா ஸ்டோர்ஸால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில், மழை நீர் லேக் ஏரியா குடியிருப்பு பகுதிக்குள் புகுவதற்கு வாய்ப்புள்ளது. கட்டிடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எவ்விதமான அவசரகால வெளியேறும் வழிகள் இன்றி கட்டிடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

Fourteenth Year Of Madurai Bench Of Madras High Court


இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை விதிக்க வேண்டும் அல்லது சில தளங்களையாவது மூட உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சரவணா ஸ்டோர்ஸ் இன் கட்டிட மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக நகர திட்டமிடல் துறை இயக்குனர் மற்றும் தீயணைப்பு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தார்