அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சிறந்த வீரருக்கு கார் பரிசு

 
Avaniyapuram

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் களந்துகொள்ளும் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 1,000 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். காளைகளை பரிசோதித்து அனுமதிக்க கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார், உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30 கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் உள்ளனர். 

Jallikattu

காயம் அடைவோருக்கு முதல் உதவி அளிக்க சுகாதாரத்துறை சார்பில் மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத்குமார் தலைமையில் 30 டாக்டர்கள், 50 நர்சுகள், உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயாராக உள்ளனர்.  ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்காக  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் குவிந்துள்ளனர். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்படுகின்றன.