ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்ட நடவடிக்கை செல்லுமா?

 
rr

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி ராக்கெட் ராஜா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

 நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா.  இவர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் கைதானார்.  நெல்லை போலீசார் இவரை கைது செய்தனர்.  மஞ்சம் குளத்தைச் சேர்ந்த சாமிதுரை  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா கைதானார்.  இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ra

 ராக்கெட் ராஜா தரப்புக்கும் சாமிதுரை தரப்புக்கும் இடையே நடந்த சாதி மோதலில் சாமிதுரை கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  ஏற்கனவே ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அன்று ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.   இதன் பின்னர் ராக்கெட் ராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்த நிலையில் ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டம் குறித்த விசாரணைக்காக இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் அறிவுரை கழகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைத்து வரப்பட்டார் ராக்கெட் ராஜா.   ஓய்வு பெற்ற நீதிபதி முன்பு அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.

 ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டது செல்லுமா என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.   குண்டர் சட்டம் போடுகின்ற அளவிற்கு பெரிய அளவு குற்றம் செய்யவில்லை என்றும் பொய்யான வழக்கு போடப்பட்டிருப்பதாகவும் ராக்கெட் ராஜா தரப்பு வாதத்தை முன் வைத்தது. ஆனால் ராக்கெட் ராஜா மீது போடப்பட்டிருக்கும் குண்டர் சட்டம் செல்லுமா என்பது குறித்து அறிவுரை கழகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

விசாரணைக்கு பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராக்கெட் ராஜா மீண்டும்  கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.