ஆளுநரின் அதிகார மீறல் ‘கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதாக முடிந்துவிடும்’ - முத்தரசன் எச்சரிக்கை..

 
ஆளுநரின் அதிகார மீறல் ‘கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதாக முடிந்துவிடும்’ - முத்தரசன் எச்சரிக்கை..


ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சு அரசியலமைப்பு அதிகாரத்தை சிறுமைப்படுத்தும் செயல் என்றும், அதிகார எல்லையை மீறுவது கண்ணாடி வீட்டில் நின்று கல் எறிவதாக முடிந்துவிடும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சி மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

முதன்முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி நாளை டெல்லி பயணம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சும், செயலும் அதிகார வரம்பு மீறியதாக தொடர்கிறது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பெயரை குறிப்பிட்டு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து பேசியுள்ளார். அந்த அமைப்பு பலவகையான “முகமூடிகள்” போட்டு செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் அமைப்பு சட்ட வரம்புக்குள் நின்று, ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் ஒரு அமைப்பின் மீது ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்தில் புகார் கூறுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல.

முத்தரசன்

ஆதாரங்கள் இருக்கும் எனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆத்திரமூட்டும் செயலாகும். உள்நோக்கம் கொண்டதாகும். ராஷ்டிரிய சுயம் சேவக் அமைப்பு ஒதுக்கீடு செய்த பணிகளை மேற்கொண்டு வரும் திரு.ஆர்.என்.ரவி “ஆளுநர் பொறுப்பை” முகமூடியாக பயன்படுத்தி வருவது அரசிலமைப்பு அதிகாரத்தை சிறுமைப்படுத்துவதாகும். ஆளுநர் தனது அதிகார எல்லையை தொடர்ந்து மீறி வருவது “கண்ணாடி வீட்டில் நின்று கல் எறிவதாக முடியும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.