மின் உற்பத்தியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
MK Stalin

மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும் எனவும், 2030க்குள் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 65,367 மெகா வாட்டாக அதிகரிக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முற்பகலில் கோவைக்கு சென்றார். தனி விமானத்தில் கோவை சென்றடைந்த அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் உற்காக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ஈரோட்டிற்கு சென்ற முதலமைச்சர் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனையடுத்து இன்று கரூரில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலில் நடைபெற்ற, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்டார். இதில், ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 20,000 பேருக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்படுவதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

mk stalin

பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்புகளை கொடுத்துள்ளோம். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2.2 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டன. ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போகிறவர்கள் அல்ல, செயல்படுத்தும் அரசு திமுக அரசு.  பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது; விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய நாளாக இந்நாள் உள்ளது. எங்கள் நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறோம்.

 மின் நுகர்வோர் குறைதீர்ப்பதற்காக மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மின்னகத்தில் அளிக்கப்படும் புகார்களில் 99% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும். 2030க்குள் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 65,367 மெகா வாட்டாக அதிகரிக்கும். தமிழ்நாட்டில் இலவச மின்சாரத்தால் உணவுப்பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிப்பால் மற்ற மாநிலங்களை விட உணவுப்பொருள் விலை குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. பணப்புழக்கம் அதிகமாக உள்ளது.பணவீக்கம் குறைந்துள்ளது. கட்டணமில்லா பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளதால் பெண்களின் பொருளாதார வலிமை அதிகரித்துள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் நிலையானதாக உள்ளது. இதுவே திமுக வழங்கும் பொற்கால ஆட்சியின் அடையாளங்கள். இவ்வாறு கூறினார்.