“இது தமிழருடைய ஆட்சி” - கொளத்தூர் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

 
stalin pongal

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மனைவியுடன் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியர்களுக்கு பொங்கல் பரிசுகளை  வழங்கினார்.

Image

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி சுழன்று வந்தாலும், என்னுடைய சொந்த தொகுதியாக இருக்கக்கூடிய இந்த கொளத்தூர் தொகுதிக்கு வருகின்றபோது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்பதை நான் பலமுறை உங்களிடத்தில் சொல்லியிருக்கிறேன். அதற்காக கொளத்தூர் தொகுதி மட்டும் தான் எனக்கு முக்கியம் என்று கருதாமல், தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும், முதலமைச்சர் என்கிற முறையில் எனக்கு முக்கியம் என்பதை நான் மறந்திடமாட்டேன்.

அதற்காகதான் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற ஒரு திட்டத்தை அறிவித்து, அந்த திட்டத்தின் அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும், அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, அந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளை தீர்த்துவைத்திட வேண்டும், அதை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவு செய்து, இப்போது அல்ல, ஆட்சிக்கு வந்த பிறகு அல்ல, ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சட்டமன்ற தொகுதிகளுக்கெல்லாம் என்னுடைய சுற்றுப்பயணத்தை நடத்தி, அந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு, அப்படி நடக்கக்கூடிய அந்த நிகழ்ச்சிகளில் ஒரு பெட்டியை வைத்து, அந்த பெட்டியில் மனுக்களை நீங்கள் போடுங்கள், அதை போட்டதற்கான அடையாளத்திற்கு அந்த நிகழ்ச்சியில் ரெஜிஸ்டர் வைத்து, உங்களுடைய பெயர்களையும், முகவரிகளையும் அதில் பதிவு செய்து, அந்த அடிப்படையில் அவர்களுக்கெல்லாம் நம்பர் கொடுத்து, அதற்குப் பிறகு அந்த தாய்மார்கள், சகோதரிகள், சகோதரர்கள் மேடையில் வைத்திருக்கக்கூடிய அந்த பெட்டியில் வந்து மனுக்களை எல்லாம் போட்டார்கள். அந்த மனுக்கள் எல்லாம் அறிவாலயத்தில் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்திருந்தோம். ஆட்சிக்கு வந்தவுடனே, நூறு நாட்களில், அந்த பெட்டியை திறந்து, மனுக்களில் உள்ள குறைகளை களைந்திடும் முயற்சியில் நாங்கள் முழுமையாக ஈடுபடுவோம், அதை முடித்துக் கொடுப்போம் என்று உறுதிமொழி கொடுத்து, அந்த அடிப்படையில் ஆட்சிக்கு வந்தோம். பெட்டியும் திறக்கப்பட்டது.

Image

நூறு நாட்களில், எது, எது எல்லாம் முடியுமோ, எவையெல்லாம் முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதோ, அதையெல்லாம் நாங்கள் முடித்து தந்திருக்கிறோம் என்பதை நான் பெருமையோடு இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அதே மாதிரிதான் இந்த கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரைக்கும் பல பிரச்சனைகளை, ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே செய்து முடித்திருக்கிறோம், சட்டமன்ற உறுப்பினராக இருந்து என்னென்ன பணிகளை செய்யமுடியுமோ அந்த காரியங்களை செய்து முடித்திருக்கிறோம். ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு என்னென்ன பணிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம், செய்யப் போகிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    

கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரைக்கும் நான் பெருமைப்படுகிறேன், வரும்போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறேன் என்று சொன்னேன் அல்லவா, அதற்கு காரணம் நீங்கள் என் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை தான். வந்தவுடனே, மிகப்பெரிய திட்டங்களை இந்தத் தொகுதியில் நாம் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். எவ்வளவோ செய்திருக்கிறோம், அதில் முக்கியமான இரண்டு பெரிய திட்டங்கள் என்னவென்று கேட்டீர்கள் என்றால், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களை கட்டி அதை திறந்து வைத்து 111 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம் 840 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, குடியிருப்புதாரர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நான் இங்கே பெருமையோடு உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Image

அதேபோல், இன்னொரு திட்டத்தை சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய மாவட்ட செயலாளர் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
திரு. சேகர்பாபு அவர்கள், அவரது துறையிலே பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு, அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் நான் தொடங்கி வைத்தேன். அந்த அறிவியல் கல்லூரியைப் பொறுத்தவரைக்கும் B.Com, BBA, BCA, B.Sc Computer Science ஆகிய நான்கு பாடப் பிரிவுகளுடன் அந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதற்குப் பின்னால், 3.12.2021 அன்று சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் துவக்கி வைக்கப்பட்டது. இதுபோல பல திட்டங்கள் கொளத்தூர் தொகுதியில் தொடங்கப்பட்டிருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன், அதாவது நான் முதலமைச்சர்  முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனிதா அச்சீவர்ஸ் அகாடமி, நம்முடைய சட்டமன்ற அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு சிறிய அளவில்தான்  தொடக்க காலத்தில் தொடங்கப்பட்டது. இன்றைக்கு பார்த்தீர்களென்றால், இதுவரை Tally படிப்பில் பெண்கள் 9 batch படித்து முடித்து விட்டார்கள், ஆண்கள் 5 batch படித்து முடித்து விட்டார்கள். தையல் பயிற்சி படிப்பில் பெண்கள் 5 batch முடிந்திருக்கிறது.

இதுவரை மொத்தம் 2,591 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி பயனடைந்திருக்கக்கூடிய சகோதரிகள்தான் இங்கே எழுச்சியோடு உட்கார்ந்து கொண்டிருக்கின்ற காட்சியை நான் பார்க்கிறேன். இதுமட்டுமல்லாமல் 360 பேர் Tailoring கற்று வருகிறார்கள். மொத்தம் பயிற்சியில் உள்ளவர்கள் 510 பேர். மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இன்றைக்கு பரந்து விரிந்து நாமெல்லாம் பார்த்து பெருமைப்படக்கூடிய வகையில், மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படக்கூடிய வகையில் வளர்ந்து வந்திருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். அதில் பயிற்சி பெற்றவர்கள், பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கக்கூடியவர்கள், அதன் மூலமாக பயனடைந்திருக்கக்கூடியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இன்றைக்கு நம்முடைய பொங்கல் விழாவை இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

பொங்கல் விழா என்பது தை திங்களை, அதை தமிழர்களுடைய  பெருமையாகவும், தமிழர்களுக்கு எனக் இருக்கக்கூடிய ஒரு விழாவாகவும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

* கடந்த 6-ஆம் தேதி சென்னையில் இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்தேன்.

* அதே நாள் மாலையில் சென்னையில் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தேன்.

* பன்னாட்டு புத்தகக் காட்சியும் நடக்க இருக்கிறது.

* சமத்துவப் பொங்கல் விழாவும் நடத்தப் போகிறோம்.

* பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவை வருகிற 12-ஆம் தேதி தொடங்கப் போகிறோம்.

* நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சங்கமும் இணைந்து சென்னை சங்கமத்தை 13-ஆம் தேதி நாம் தொடங்க இருக்கிறோம்.

* ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து  கொண்டிருக்கிறது.

* மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவுகள் தொடங்க இருக்கிறது.

* வெளிநாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களையெல்லாம் ஒன்று சேர்த்து, அயலகத் தமிழர் திருநாள் 11-ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது.

* கீழடியில் அருங்காட்சியகம், தொல்பொருள் ஆராய்ச்சி, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த கீழடி அருங்காட்சியத்தை விரைவில் திறந்து வைக்க இருக்கிறோம்.

* திருவள்ளுவர் திருநாள் அன்று தமிழ்ப் பெருமக்கள் பெயரில் விருதுகள் எல்லாம் வழங்கப்பட இருக்கிறது.

- இப்படி தை மாதம் முழுக்க அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், நம்முடைய கட்சியின் சார்பிலும் விழாக்கள் இந்த மாதம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.

Image

அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை இது வெறும் கழக ஆட்சி என்று சொல்வது மட்டுமல்ல, இது தமிழருடைய ஆட்சி, தமிழருக்காக நடைபெறக்கூடிய ஆட்சியாக  நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய பழம் பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், இப்படிப்பட்ட விழாக்களை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட விழாவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றைக்கும் நீங்கள் எனக்கு பக்கபலமாக இருக்கக்கூடியவர்கள். அதேபோல் நானும் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, தொடர்ந்து என்னுடைய கடமையை நிறைவேற்ற நீங்கள் எப்போதெல்லாம் உத்தரவிடுகின்றீர்களோ, அந்த உத்தரவை ஏற்று நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன்! காத்திருக்கிறேன்! என்ற அந்த செய்தியை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்களுக்கு என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, உங்கள் அனைவரையும் சந்திப்பதிலே மீண்டும் ஒருமுறை என்னுடைய மகிழ்ச்சியை இந்த நேரத்தில் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனக் கூறினார்.