ஒரே பயணச்சீட்டு திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 
stalin

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என்று அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

சென்னை நந்தனத்தில் அமைந்திருக்கும் மெட்ரோ ரயில் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்று வருகிறது.  இக்கூட்டத்தில்,  மோட்டார் அல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக,  ஒரே பயணச்சீட்டில் சென்னை மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்யும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயணிகள் ஒரு டிக்கெட் மூலம், மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பயணங்களை மேற்கொள்ள முடியும்.