மழை, வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பதே நமது இலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
stalin

மழை, வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை சார் செயலாளர்கள், அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

stalin

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது: மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க வேண்டும். மக்களை காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். தொலைபேசியிலோ, வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்;அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு. உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, தீயணைப்பு துறைகள் என அனைவரும் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.