முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்க கூடாது - முதலமைச்சர் உத்தரவு

 
mk stalin

போதிய முன் அறிவிப்பின்றி அணைகளில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.  கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை  நடத்தினார். 

mettur dam

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதிய முன் அறிவிப்பின்றி அணைகளில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது எனவும், இரவு நேரத்தில் தண்ணீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். சில இடங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாவதாக செய்திகள் வருவதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு தார்ப்பாய்களை கொண்டு மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். கனமழையால் பயிர்சேதம் ஏற்பட்டிருந்தால் உடனே நேரடி கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.