காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
MK Stalin pongal

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார். 

அறுவடை திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று தை முதல் நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என கூறி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.  தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில், காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்து கொண்டு கொண்டாடினார். பின்னர், காவலர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுகைளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் கலந்து கொண்டனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.