பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

 
stalin

மதுரையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.  

மதுரை மாவட்டம் அழகுசிறை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், திடீரென பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் இந்த வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

madurai blast

பட்டாசு ஆலையின் 2 வெடி மருந்து கிடங்குகளில் பணியில் இருந்த பணியாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே வெடி விபத்தில் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் 5 பேரும் வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.   பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.