அதிமுக அரசு ராணி மேரி கல்லூரியை இடிக்க முயன்றது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
mk stalin

கடந்த அதிமுக அரசு சென்னை ராணி மேரி கல்லூரியை இடிக்க முயன்றதாக அக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கம்பீரமான பாரம்பரியமான பெருமையை கொண்டது ராணி மேரி கல்லூரி. இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்றும், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது ராணி மேரி கல்லூரி. இத்தகைய பெருமை கொண்ட ராணி மேரி கல்லூரியை இடிக்க கடந்த கால அதிமுக அரசு முயன்றது. மாணவர்களுக்கு ஆதரவாக நான் களத்தில் இறங்கி போராடினேன். அதற்காக போலீசார் என்னை கைது செய்தனர். ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாதது. 


தொடர்ந்து பேசிய அவர், பட்டங்களை பெறும் மாணவர்கள், பாடங்களை கற்பதில் இருந்து பாடங்களை உருவாக்கும் அளவிற்கு உயர வேண்டும். பட்டம் பெரும் நாள் என்பது ஒவ்வொருவரின்  வாழ்நாளிலும் மறக்க முடியாத நாளாக இருக்கும். மாணவர்கள் பெற்ற அறிவு அவர்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது , அவர்களின் அடிப்படை உரிமை. இவ்வாறு கூறினார்.