முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின்

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் அழைப்பு மையத்தினை (CM Help Line Call Centre) பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.7.2022) சென்னை , சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் அழைப்பு மையத்தினை (CM Help Line Call Centre) பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைப்பட்டு “முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

tn

இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறை மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மனுக்களும், ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பில் மின்னணு முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், முக்கிய மாற்றமாக, முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மட்டுமல்லாது இணையதளம், தபால், சமூக வலைதளம் மற்றும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்படும் திங்கள் தினக் கோரிக்கைகள், மக்கள் தொடர்பு முகாம்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், என அனைத்து நிலைகளிலும் பெறப்படும் மனுக்களும் ஒருசேர இம்முறையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறாக, மாநிலத்தில் அனைத்து தரப்பிலும் இருந்து பெறப்படும் மனுக்கள் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 7.5.2021 முதல் இதுநாள்வரை 26,43,654 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

tn

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் அழைப்பு மையத்தினை பார்வையிட்டு, பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, வீட்டுமனைப் பட்டா பெற்ற அடையாறு பகுதியைச் சேர்ந்த பயனாளியிடமும், முதியோர் ஓய்வூதியம் பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிடமும் உரையாடினார். அப்போது அப்பயனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டதற்காக நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, குடும்ப அட்டை இடமாறுதல் கோரிய அம்பத்தூர், அயப்பாக்கத்தைச் சேர்ந்த பயனாளியிடம் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவருக்கு உடனடியாக குடும்ப அட்டை மாறுதல் செய்து வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், திருப்பூர் வடக்கு வட்டாட்சியரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் முகவரி துறையிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டதற்காக பாராட்டினார்.

தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நல உதவி ஆணையரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெறப்பட்ட மனுக்கள் மீது தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும், முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளை ஏற்று, கோரிக்கைகளை நிவர்த்தி செய்த பணியாளர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது பெறப்படும் மனுக்கள் மீதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, முதலமைச்சரின் முகவரித் துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்து ஆய்வு செய்து அம்மனுக்களை விரைவாகவும், உரிய முறையிலும் தீர்வு காண வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.