அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை

 
admk office

ஜூலை 11ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில், அதில் கத்திக்குத்து, கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக இருதரப்பினர் மீதும் அப்போது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.