பழைய வீட்டை சீரமைக்கும் பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி

 
building

கும்பகோணம் காமராஜர் சாலையில் பிலோமினா மேரி என்பவரது பழைய வீட்டினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இதில் கார்த்தி என்பவர் உயிரிழந்த நிலையில், ஜாகிர் உசேன் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

building

கும்பகோணம் காமராஜர் சாலையில் பிலோமினா மேரி என்பவர் தனது மாடிப்  பகுதியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, இதற்காக 4 கட்டிட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று மாலை 4 மணி அளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடப் பகுதி திடீரென சரிந்தது. இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளிகளும் சிக்கினர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போராடி ஜாகிர் உசேன் என்ற கட்டிட தொழிலாளியினை உயிருடன் மீட்டனர். 

பெரும்பாலான சிமெண்ட் காரைகள் விழுந்ததால் கார்த்திக் என்ற தொழிலாளி அடியில் சிக்கிக் கொண்டார். இவரை உயிரிழந்த நிலையிலேயே தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டனர். உயிரிழந்த கார்த்திக்கின் உடல் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஜாகிர் உசேன் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.