#Breaking: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு.. - கமல்ஹாசன் அறிவிப்பு..

 
#Breaking: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு.. -  கமல்ஹாசன் அறிவிப்பு..


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று முன் தினம்  கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு கோரியிருந்தார். இதனை அடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவை அறிவிப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.  இந்நிலையில் இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அதில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

#Breaking: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு.. -  கமல்ஹாசன் அறிவிப்பு..

இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மனிதநேய மக்கள் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பாக போட்டியிடும் எனது நண்பரும்,  பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பேரணுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக ஆமோதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

கமல்

அவரது வெற்றிக்காக நானும் எனது கட்சியும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.  தனிப்பட்ட வாழ்வில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது சொந்த துயரையும் மீறி,  மக்கள் பணி செய்ய மீண்டும் தேர்தலில் களத்தில் இறங்கி இருக்கும் நண்பர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் மதவாத சக்திகள் முழு பலத்தோடு எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில்  மக்கள் நீதி மையம் கட்சிக்கு எள் முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மையம் நிபந்தனைகளற்ற ஆதரவை அளிப்பது என முடிவு செய்துள்ளோம்.  இந்தியாவின் பன்முகத்துவமும்,  இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது.  மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என துடிக்கிறார்கள். மக்களின் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என ஒவ்வொன்றுக்குள்ளும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.

கமல்

ஜனநாயக சக்திகளின் குரல்வலையும், கருத்துரிமையும் ஒடுக்கப்படுகிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் கொள்ளை புறமாக  நுழைந்து மாநில உரிமைகளில் தலையிடுவதும்,  இடையூறு செய்வதும் தொடர்கிறது. இந்த ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்றுக் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.  மண்,மொழி,  மக்களை காக்க கட்சிகளோடு  கரம் கோர்க்க நானும்,  மக்கள் நீதி மையமும் என்றும் தயங்கியது இல்லை.  நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திரு ஈ.வி.கே .எஸ். இளங்கோவனை வெற்றி பெறச் செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு முடிவெடுக்கும் தேர்தல் நாளில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது பூர்த்தியான ஒவ்வொரு வாக்காளரும் ஒன்று கூடி தங்கள் வாக்குகளை தவறாது பதிவு செய்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் பங்கு பெற வேண்டும். தமிழ்நாடு சமத்துவத்தின்,  சகோதரத்துவத்தின்,  சமூக நீதியின் மண் என்பதை மீண்டும் இந்தியா முழுக்க ஓங்கி ஒலிக்கச் செய்வோம்.   ஒன்று கூடுவோம்... வென்று காட்டுவோம்..  தமிழ்நாடு வாழ்க..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.