#Breaking: அண்ணாமலையுடன் ஓபிஎஸ் சந்திப்பு.. பாஜக முடிவு என்ன??

 
அண்ணாமலை - ஓபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலையை சந்தித்து,  இடைத்தேர்தலில் ஆதரவு  கோரியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்  அதிமுகவை பொறுத்தவரையில்  பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 2  அணிகளும் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளும்  தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை தனித்தனியே சந்தித்து ஆதரவு கோரி வருகின்றன.   குறிப்பாக எடப்பாடி பழனிசாமி  அணியினர், கூட்டணி கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன்,  புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட  கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

ஓபிஎஸ்

அந்த வகையில் சற்று நேரத்தில் முன்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  தங்கமணி,  வேலுமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து தங்களது அணி வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு கோரியிருந்தனர் .  இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஜெயக்குமார் தங்களது கோரிக்கையை பாஜகவிடம் தெரிவித்திருப்பதாகவும், அவர்களுடைய முடிவை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

அண்ணாமலை - இபிஎஸ் - ஓபிஎஸ்

 இந்த சூழலில் தற்போது ஓ. பன்னீர்செல்வம்  தனது அணியினருடன்,  பாஜக மாநில தலைமை அலுவலகத்தில்  அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். அப்போது தங்களது தரப்புக்கு ஆதரவு அளிக்குமாரு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்திருந்தார்.  இந்த சந்திப்பிற்கு பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.   அப்போது தாங்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இடைத்தேர்தல் பணிக்காக 14 பேர் கொண்ட குழுவை அண்ணாமலை நியமித்திருந்தார்.  பாஜக தனித்து போட்டியிடும் என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால்  தற்போது நிலவும் சூழலில் தனித்து போட்டியிட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.