"மற்ற மாவட்டங்களில் 16ம் தேதி முதல் காலை உணவுத் திட்டம்" - கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு!

 
tn

காலை உணவுத் திட்டத்தை மதுரையில் செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் 16ம் தேதி முதல் இத்திட்டத்தினை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும்பொருட்டு பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டது.

govt
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செம்மையான முறையில் நடைமுறைப்படுத்திடும் பொருட்டு திட்டச் செயலாக்க வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் உணவு தயாரிக்கும் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் / சமையல் கூடங்களை ஆய்வு செய்வதற்கான ஆய்வுப் படிவங்கள் பார்வை 3-இல் கண்டுள்ள நேர்முக கடிதத்தில் வெளியிடப்பட்டன.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2022 அன்று மதுரை மாநகரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு 15.09.2022 அன்று திட்டம் துவக்கப்பட உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2022-ல் இத்திட்டம் துவக்கப்பட்ட பின்னர், இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பிற பகுதிகள் அடங்கியுள்ள மாவட்டங்களில் 16.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைப்பது தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவட்டத்தில் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் 16.09.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால், அரசாணை (நிலை) எண்.43, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாள் 27.07.2022-ல் தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் (மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகள்) ஏதேனும் ஒரு பள்ளியினை தேர்வு செய்து அங்கு, அமைச்சர் பெருமக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு திட்டம் தொடங்கப்படவேண்டும். திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரை ஊரகப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பள்ளியினை தேர்வு செய்தும், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரை ஊரக / மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்தும் மற்றும், நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மலைப்பகுதியிலுள்ள பள்ளியினை தேர்வு செய்தும் மாவட்ட அளவிலான திட்ட துவக்க விழா 16.092022 அன்று நடத்தப்படவேண்டும்.

stalin

அனைத்து மாவட்டங்களிலும் எஞ்சியுள்ள ஊரக, மலைப்பகுதி / நகராட்சி / மாநகராட்சிப் பள்ளிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்த மேற்கண்ட அரசாணையின்படி அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் அதே நாளன்று (16.09.2022) சம்பந்தப்பட்ட உள்ளாட்சி முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2022-ல் இத்திட்டம் துவக்கப்பட்ட பின்னர், இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பிற பகுதிகள் அடங்கியுள்ள மாவட்டங்களில் 16.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இத்திட்டத்தினை தொடர்ந்து கண்காணித்து ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொண்டு திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய்த் துறையினைச் சார்ந்த வருவாய்க் கோட்டாட்சியர்களை ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படவேண்டும்.

mkstalin

அனைத்துப் பள்ளிகளிலும் 16.09.2022 அன்று இத்திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தான விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்கள் மூலம் சமூக நல இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்து, செம்மையாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.