பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் : முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் சங்கம்...

 
stalin

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்  மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.  

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் : முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் சங்கம்...

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கர்ம வீரர். காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார். பின்னர் இத்திட்டம் சத்துணவு திட்டமாகவும் அதை தொடர்ந்து வாரத்தில் ஐந்து நாளும் முட்டை வழங்கும் திட்டமாக 10ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவுப்படுத்தப்பட்டது. கல்வி கற்கும் மாணவர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் நலம், மனநலம் முற்றிலும் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க உன்னத திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார்.

ஆசிரியர்கள்

நாட்டிலே அனைத்து மாநிலங்களுக்கு முன்னோடியாக மாணவர்களுக்கென தனி அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சத்துணவு திட்டத்தை 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.