ஏலம் விட காலம் தாழ்த்தும் டாஸ்மாக் நிர்வாகம் - நீதிமன்றத்தை நாட பார் உரிமையாளர்கள் முடிவு..

 
high court


750 டாஸ்மாக் பார்களை ஏலத்தில் விட உயர்நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளதாக பார் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.  

சென்னை பல்லாவரத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  சென்னை மண்டலத்துக்குட்பட்ட 750 டாஸ்மாக் பார்களை ஏலத்தில் விடாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏலம் விடும் பணிகளை தொடங்காத டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் இந்தக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  மேலும், டாஸ்மாக் சங்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உயர்நீதிமன்ற  தீர்ப்பின்படி டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக சென்னை மண்டலத்திற்கு டெண்டர் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

tasmac

கடை மேற்பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்ய முற்படுவதை டாஸ்மாக் நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்றும்,   அரசு கருவூலத்திற்கு போக வேண்டிய மது கூட உரிமை தொகையை திருப்பி விட முயற்சிக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 4 மாதங்களாக  மதுக்கூடங்கள் மூடி இருக்கும் காரணத்தினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குறிப்பிட்ட அவர்கள், ஆகையால்  பார் உரிமையாளர்கள் அனைவரும்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தனர்.  30 மாவட்டங்களில் மதுக்கூடங்கள் நடைபெற்று வருகிறது; சென்னை மண்டலத்தில் மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஏலம் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது என்றனர்.  டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால். மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை  அணுக உள்ளதாக கூறினர்..