தைபொங்கல் நாளில் வங்கி முதன்மைத் தேர்வு.. - ஒத்திவைக்கக் கோரும் தேர்வர்கள்..

பொங்கல் பண்டிகை நாளில் நடைபெற இருக்கும் வங்கி முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரதான வங்கியாக செயல்படும் ஸ்டேட் வங்கி( எஸ்.பி.ஐ). இந்த வங்கியில் காலியாக உள்ள 5,300 பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி முதல்நிலை தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், முதன்மை தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் நாளில் முதன்மை தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாகவே அரசுத் தேர்வு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகை வருகிறது. அதனை அறியாமலோ அல்லது கவனிக்காமலோ வங்கி தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் அனைவரும் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் இருப்பார்கள் என்பதால் தேர்வு எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று கருதுகின்றனர். ஆகையால், ஜனவரி 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி முதன்மை தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.