திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை - உடனே அமல்படுத்த கோர்ட் உத்தரவு

 
tiruchendur murugan temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தங்களது செல்போன்களில் படம், வீடியோ எடுத்து செல்கின்றனர். ஒரு சிலர் கோவிலுக்கு உள்ளேயும் செல்போன்களை கொண்டு சென்று படம் எடுத்து வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

madurai high court

இதனை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். பக்தர்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும், தடை உத்தரவை மீறி யாராவது செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என்று நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிடட்டுள்ளது. இந்த தடையை உடனே அமல்படுத்த வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.