ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிடும் பாஜக..

 
 பாஜக!

ஈரோடு கிழக்கு தொகுதியில்  பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4 ம் தேதி உயிரிழந்தார்.  இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸின் கட்சியின் பலம் 18ல் இருந்து 17 ஆக குறைந்தது . ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன்  ஈவேரா மறைவு குறித்து,  சட்டப்பேரவைச் செயலகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரியபடுத்தியுள்ளது.  இந்த தகவலை  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு,   ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்துவார். இதனையடுத்து  6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கான அறிவிப்பு வெளியாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமகன் ஈவெரா மறைவு.. கி.வீரமணி இரங்கல்..

தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், இந்த தேர்தலில் வெற்றிபெற்றாகவேண்டிய கட்டாயம் இருப்பதால் திமுக போட்டியிட வாய்ப்புள்ளது.  அதேநேரம் ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி என்பதால் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒதுக்கினால், பிரபலமான  வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்.  ஆகையால்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தற்போதே தங்களுக்கு தெரிந்த தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.  2021 தேர்தலுக்கு முன்பாக ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டையாக விளங்கியது. 2011, 2016 தேர்தல்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றிபெற்றன.  ஆகையால் இந்த தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அண்ணாமலை

இதற்கிடையே பாஜகவும் , கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று சொல்லி வருகிறது.  காரணம் கொங்கு மண்டலத்தில் தான் அக்கட்சிக்கு 2 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  அத்துடன்  புத்தாண்டு அன்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க., தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில் மீண்டும் இதை செய்ய தயங்காது என்றும், தி.மு.க. கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும்  அண்மைக்காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.  ஆகையால் 2024  மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவும்,  கொங்கு மண்டலத்தில் தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும் இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படி  கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதியைக் கைப்பற்ற போட்டிப் போட்டுக்கொண்டு இருப்பதால், இந்த இடைத்தேர்தல்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.