தேர்தல் நன்கொடை - ரூ.1,917 கோடியுடன் தொடர்ந்து முதலிடத்தில் பாஜக..

 
bjp

தேர்தல் நன்கொடை  வசூலில் ரூ.1,917 கோடி பெற்று  பாஜக முதலிடத்தில் உள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களது கட்சிகளை நடத்தவும்,  தேர்தலை சந்திக்கவும் நன்கொடை வசூல் செய்து கொள்ளலாம்.  அதை நிறுவனங்கள், அமைப்புகள், பொது மக்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். அதிலும் , குறிப்பிட்ட  தொகைக்கு மேல் உள்ள பணத்தை தேர்தல் நிதி பத்திரம் மூலமாக பெற வேண்டும் என்கிற விதி உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்படுகின்றன.  அந்தவகையில் கடந்த ( 2020-21-ம்) நிதியாண்டில் பாஜக,   ரூ.752 கோடியை நன்கொடையாக பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டில் அக்கட்சியின் நன்கொடை 154 % அதிகரித்திருக்கிறது. 2021-22-ல் ரூ.1,917 கோடி நன்கொடை வசூல் செய்து பாஜக முதலிடத்தில் உள்ளது.  

இந்திய தேர்தல் ஆணையம்

இதேபோல்,  ரூ.545.7 கோடி நன்கொடை வசூலித்து திரிணமூல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும்,  காங்கிரஸ் கட்சி  ரூ.541.2 கோடி பெற்று 3வது இடத்திலும் உள்ளது.  காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை கடந்த நிதியாண்டில் ரூ.285.7 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு  89% அதிகரித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 2021-22 நிதியாண்டில் அனைத்து 8 தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.3,289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளன. இதில், பாஜகவின் பங்கு மட்டும் 58 சதவீத அளவிற்கு உள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் முன்பை விட அதிக அளவில் நன்கொடையை திரட்டியுள்ளது. அதன்படி, 2020-21-ல் ரூ.74.4 கோடியாக மட்டுமே இருந்த அக்கட்சி பெற்ற நன்கொடை 2021-22-ல் 633 % உயர்ந்து ரூ.545.7 கோடியைத் தொட்டுள்ளது. அதேசமயம், சிபிஎம் கட்சி பெற்ற நன்கொடை 2020-21-ல் ரூ.171 கோடியாக இருந்த நிலையில் 2021-22-ல் ரூ.162.2 கோடியாக குறைந்தது. ஆனால், சிபிஐ பெற்ற நன்கொடை ரூ.2.1 கோடியிலிருந்து ரூ.2.8 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.

தேர்தல் நன்கொடை - ரூ.1,917 கோடியுடன் தொடர்ந்து முதலிடத்தில் பாஜக..

பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) நன்கொடை வசூல் ரூ.52.4 கோடியிலிருந்து ரூ.43.7 கோடியாக குறைந்துள்ளது. அதிக நன்கொடை பெற்றதைப் போலவே கடந்த 2021-22 நிதியாண்டில் செலவினத்திலும் பாஜகவே முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி, கடந்த நிதியாண்டில் ரூ.854.46 கோடியை செலவு செய்துள்ளது. காங்கிரஸ் ரூ.400 கோடி, திரிணமூல் ரூ.268.3 கோடி, பிஎஸ்பி 85.1 கோடி, சிபிஎம் 83.41 கோடி, சிபிஐ 1.2 கோடி, என்சிபி ரூ.32.2 கோடி செலவிட்டுள்ளன.

 மாநில கட்சிகளைப் பொறுத்தவரையில் திமுக கடந்த நிதியாண்டில் ரூ.318.7 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ரூ.307.2 கோடி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) ரூ.279.4கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.93.7 கோடி நன்கொடையை திரட்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.