திருச்சியில் கிராமமே வக்பு வாரியத்திற்கு சொந்தமா? அண்ணாமலை கேள்வி

 
annamalai

மதநல்லிணக்கத்தை காக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 வக்பு வாரியம்

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சிராப்பள்ளி மாவட்டம், முள்ளிக்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் அவர்கள் திருச்செந்துறை கிராமத்தில் உள்ள அவரது 1 ஏக்கர் 2 சென்ட் விவசாய நிலத்தை திரு. ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு விற்பதற்காக இணை III துணை-பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது, அவரின் நிலம் உட்பட கிராமத்தில் உள்ள 389 ஏக்கர் நிலத்தை விற்க தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்று கூறியதாகவும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எழுதிய 11.08.2022 தேதியிட்ட கடிதத்தை காட்டியதாகவும் கூறப்படுகிறது.
 
1954ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பெற்றுள்ளதாக கூறப்படும் இந்த நிலத்தை பற்றி தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திருச்சிராப்பள்ளியில் உள்ள அனைத்து துணை-பதிவாளர்களுக்கும் 11.08.2022 தேதியிட்ட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறுவது  என்னவென்றால், வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்க, பரிமாற்றம் செய்ய, அடமானம் வைக்க வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்று 1995 ஆம் ஆண்டு வக்பு சட்டத்தை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.    
 
இந்த விவகாரத்தை பற்றி மேலதிகாரிகளிடம் ஆலோசிக்காமல், இந்த கடிதத்தின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்ட அலுவலர் (DRO) ஒரு உத்தரவை பிறப்பித்து திரு. ராஜகோபால் அவர்களிடம் பத்திரப்பதிவு செய்யமுடியாது என்று கூறியுள்ளார். இதை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்ற போது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதற்கு மேலாக, அண்மையில் கிராம மக்கள் மற்றும் வக்பு வாரியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட வருவாய் கோட்ட அலுவலர் (DRO) நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரின் முன்னிலையில், இந்த விவகாரத்தில் வேறேதேனும் உத்தரவை அரசு பிறப்பிக்கும் வரை, நிலங்களை விற்கவோ, வாங்கவோ எந்த வித நிர்பந்தமும் இல்லை என்பதை எடுத்துரைத்துள்ளனர்.   

 நடவடிக்கை
 
இந்த குழப்பம் எழுவதற்கு ஒரே காரணம் தமிழக அரசின் கவனக்குறைவும் மெத்தன போக்கும் மட்டுமே. இந்த நிலம் ராணி மங்கம்மாள் அவர்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு இனாமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1963ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த இனாம் நிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றும் சட்டத்தில் மூன்றாம் பாகத்தில், இனாம் நிலங்களில் எவரேனும் குடியிருந்தால் அது வருவாய் நிலங்களாக மாற்றப்பட்டு பட்டா வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருதரப்பினரிடமும் ஆவணங்கள் பெற்று, அதை ஆராய்ந்து, சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து பிறகு அரசு அலுவலர்கள் ஒரு முடிவை எடுத்திருக்கவேண்டும். இவற்றை செய்ய தவறியதன் விளைவே இந்த குழப்பத்திற்கு காரணம். 
 
திருச்செந்துறை பிரச்சனை இரு மதத்தினர் இடையே உள்ள பிரச்சனையாக மாறாமல் இரு தரப்பினரும் சமரசமான தீர்வை அடைய மத்திய வக்பு வாரியத்தின் கல்வி மற்றும் பெண்கள் குழுவின் தலைவர், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த திருமதி முனாவாரி பேகம் அவர்கள் இரு தரப்பு மக்களிடம் பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக தீர்வை காண பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.