மன்னிப்பு கேட்டார் பாஜக நிர்வாகி மகள் ஷர்மிகா

 
ஷ்

சித்த மருத்துவ குறிப்புகள் சொல்கிறேன் என்று மாட்டு கறி குறித்து பேசியதால் டாக்டர் ஷர்மிகா  அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் பாஜக  நிர்வாகி டெய்சி சரண் மகள் என்பதால் திட்டமிட்டு மதப் பிரச்சாரம் செய்கிறார் என்று அவர் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.  மேலும் போகிற போக்கில் மருத்துவ குறிப்புகளையும் இஷ்டத்திற்கு தெரிவித்து விட்டதால் அது குறித்து சர்ச்சையாகி மருத்துவத்துறையும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது . இந்நிலையில் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் டாக்டர் ஷர்மிகா.

 தமிழக பாஜகவில் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சி சரண்.   திருச்சி சூர்யா ஆடியோ விவகாரத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் நாங்கள் அக்கா தம்பி போன்றவர்கள் என்று சமாதானமானவர் டெய்சி சரண்.   அவரது மகள்தான் ஷர்மிகா.   சித்த மருத்துவம் படித்துவிட்டு யூடியூப் சேனலில் மருத்துவ குறிப்புகள் வழங்கி வருகிறார். 

 இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மாட்டுக்கறி குறித்து தெரிவித்திருந்த கருத்துக்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன.  மாட்டுக்கறி என்பது கடவுளாக பார்க்கும் ஒரு விஷயம்.  அதையும் மீறி சொல்ல வேண்டுமென்றால் இந்திய மக்கள் டிஎன்ஏவில் தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானமாகக் கூடிய சக்தி இல்லை.   ஆடு, கோழி, கௌதாரி என்று நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது . பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்திருந்தார் . கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு ,மலேரியா வரும் என்றும் குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடி விடும் என்றும் கூறியிருந்தார்.

ச்

அவர் மேலும்,  சில பேட்டிகளில் குப்புற படுத்தால் மார்பக புற்று நோய் வரும்.  நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக மாறும் என்றும் சொல்லியிருந்தார்.  இதனால் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வந்தனர்.  இதற்கு அவர்,  ஒரு ராணுவ வீரரை போலத்தான் மருத்துவர்.  நாட்டுக்கு சேவை செய்பவர்கள்.  நான் ஒரு சித்த மருத்துவ இதை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார் . ஆனாலும் நெட்டிசன்கள் மாட்டுக்கறி விவகாரத்தில் ஷர்மிகாவை வறுத்து எடுத்து வருகின்றனர்.

 இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குனர் பார்த்திபன் அளித்துள்ள விளக்கத்தில், சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இல்லை என்றும் எந்த இடத்திலும் சாப்பிடக்கூடாது என்றும் குறிப்பிடப்படவில்லை.  யாருக்கு சத்தான உணவுகள் தேவைப்படுகிறதோ அது சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி அவர்களின் விருப்பப்படி சாப்பிட்டுக்கொள்ளலாம்.

 ஷர்மிகா சொல்லுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  தன்னை  பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இதுபோல பேசுகிறார் என்று சொல்லி இருக்கும் அவர்,  ஹோமியோபதி மருத்துவத் துறையின் ஒரு மருத்துவர் மருத்துவ ரீதியான கருத்துக்களை மட்டுமே மக்களிடையே சொல்ல வேண்டுமே தவிர மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு சொல்ல கூடாது என்றும் எச்சரித்து இருக்கிறார்.

இந்நிலையில், டெங்கு, மலேரியா, குலோப் ஜாமுன் குறித்து பேச்சுவாக்கில் சொல்லிவிட்டேன் என்று சொல்லி அதற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.