விவசாயிகளை வீதியில் விட்ட திராவிட மாடல்; போராட்டத்தை கையிலெடுக்க பாஜக முடிவு

 
குழாய்

விவசாயிகளை வீதியில் விட்ட திராவிட மாடல் விவசாய சங்கம், போராட்டத்தை கையிலெடுக்க பாஜக முடிவு செய்திருப்பதாக பாஜக விவசாய அணி தலைவர் G.K.நாகராஜ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சின்னமனூர் பகுதியில் ஆற்றின் கரையிலிருந்து 200மீட்டர் தள்ளி தனது சொந்தநிலத்தில் சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கண்ணிசேர்வைபட்டி, ஓடைப்பட்டி வேப்பம்பட்டி, முத்தலாபுரம், காமாட்சிபுரம்  ஆகிய பகுதிகளிலுள்ள 3000த்திற்கும் மேற்பட்ட நிலங்களுக்கு அரசாணை 142(PWD.GO-2014)—ன் படி விவசாயம் செய்துவந்த விவசாயிகளின் 46-க்கும் மேற்பட்ட தண்ணீர் கொண்டு செல்லும் பாசன குழாய்களை உடைத்து மீண்டும் குழாயை இணைக்க முடியாதவாறு கான்கீரிட்டால் மூடி அரசு அதிகாரிகள் உதவியோடு மாபெரும் அராஜகத்தை செய்திருக்கிறார் நிதியமைச்சர் தியாகராஜன்.சில தனிப்பட்டோர் மீதுள்ள தனது விரோதப்போக்கை ஒட்டுமொத்த விவசாயிகள் மீது காட்டி 3,000 ஏக்கர் விவசாய பூமியை தரிசுநிலமாக்கியிருக்கிறார் அமைச்சர் தியாகராஜன்.

தமிழகம் முழுவதும் இதுபோல் ஆற்றுப்பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்வது நடைமுறையிலிருக்கும்போது, அமைச்சரின் சொந்த ஊரில் மட்டும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது என்ன காரணமோ?இது இப்படி இருக்க உடனடியாக களத்தில் இறங்கி மாற்றுக்கட்சியினர் போராட வாய்ப்பளிக்காமல் 2,000 விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராடி,காணொளி வெளியிட்டு  விவசாயம் காப்பதாகக் கூறிய  விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் போன்றவர்கள் இன்றுவரை அப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விவசாயிகளை அலையவிடுவது ஏனோ?

விவசாயிகள் போராட்டத்தில் பேசிய விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போன்றவர்கள் இன்றுவரை அப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் குழாய் உடைப்புக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும்,தேனி மாவட்ட ஆட்சியருமே காரணம்.இப்போராட்டம் அரசுக்கெதிரான போராட்டம் அல்ல.முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றால் உடனடியாக தீர்வு காண்பார் என்று கூறியதோடு,இதற்கு அமைச்சர்களோ,முதலமைச்சரோ காரணமல்ல என்று பேசியவர், இன்றுவரை  குழாய்உடைப்பு பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விவசாயிகளை நடுவீதியில் விட்டுச்சென்றது திராவிட  மாடல் அரசின் அதிகாரம் துஷ்பிரயோகத்திற்கு துணைபோகும் திராவிட மாடல் விவசாய சங்கம் என்பதை பி.ஆர்.பாண்டியன் நிரூபித்திருக்கிறார்.

இதுபோன்ற விவசாய சங்கத்தலைவர்கள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதாகக் கூறி அனுகூல சத்துருவாக மாறி, ஆட்சியாளர்களின் கைப்பாவையாக இருப்பது தமிழகத்தில் நீண்டகாலமாக நடந்துவரும் கொடுமையிலும் கொடுமை. சின்னமனூர் விவசாயிகளின்  நிலைமையை பாஜக விவசாய அணி உன்னிப்பாக கவனித்து வருகிறது.விரைவில் விவசாயிகளின் இப்பிரச்னைக்கு தீர்வுகாணவிட்டால் களமிறங்கிபோராட தயாராகிவிட்டது  பாஜக விவசாய அணி.விரைவில் விவசாயிகளுக்கு உண்மையைக்கூறி ஒன்றுதிரட்டி போராடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.