தி.மு.க.வையும் அதன் இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது - வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

தி.மு.க.வையும் அதன் இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது என கூறியுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஆ.ராசாவின் பேச்சு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய விழாவில் தி.மு.க., எம்.பி., ஆ.ராசா இந்துக்கள் மனம் புண்படும் படியும், இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். இதை கடுமையாக கண்டிக்கிறோம். தி.மு.க.,வையும், அதன் இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது என்பதற்கு இது உதாரணம். தன் கட்சியின் லோக்சபா எம்.பி.,யாக இருப்பவர் இப்படி பேசியதற்கு, முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.இந்த அவதுாறு கருத்தை முதல்வர் ஏற்கிறாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். பிறப்பின் அடிப்படையிலான எந்த வேறுபாட்டையும், தீண்டாமையையும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பா.ஜ.,வும் ஏற்றுக்கொள்வதில்லை. சிறுபான்மை மதத்தினர் தி.மு.க.,வின் வாக்கு வங்கியாக இருப்பதால், அவர்களை 'தாஜா' செய்வதற்காக இவ்வாறு இந்துக்களை சீண்டிக்கொண்டே இருக்கின்றனர். அதைதான் ஆ.ராசாவின் பேச்சு உணர்த்துகிறது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க.,வின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது. வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.