திரைத்துறையினருக்கு ஏன் விருது வழங்குகிறீர்கள் என பாஜகவினர் கேட்டனர்- அண்ணாமலை

 
Annamalai

அதிமுகவுடன் பிரச்சனை இல்லை, கூட்டணியில் தொடர்கிறது. அவர்களுடன் தான் சேர்ந்து போட்டியிட போகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பில் தமிழ்தாய் விருதுகள் வழங்கும் விழா சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட  பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை மேடையில், பழம்பெரும் நடிகர்களான லதா, சச்சு, வெண்ணிராடை நிர்மலா, நகைச்சுவை நடிகை கோவை சரளா, இயக்குனரும், நடிகருமான கே.பாக்கியராஜ், திரைப்பட பாடகி சுசிலா மற்றும் கலைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு தமிழ்தாய் விருதுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் என 10 பேருக்கு வழங்கினார். 

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பழம்பெரும் நடிகர்கள் கலந்துகொண்டதால் அவர்கள் மத்தியில் அமரமாட்டேன் என்றேன், அதனால் ஓரமாக நின்றேன். திரைப்பட துறையினரை பா.ஜ.க கலை மற்றும் கலாச்சார பிரிவு தமிழ்தாய் விருதுக்கு பேசி புரிய வைத்து இந்த விழாவுக்கு அழைத்து வந்தோம். கட்சியினர் பலர் ஏன் அவர்களுக்கு விருது கொடுக்கிறீர்கள் என என்னிடம் கேட்டனர் அதனையும் தாண்டி கலைஞர்களாக பார்கிறேன்  என்று தன்  கட்சியினர் மீது குறை தெரிவிப்பது போன்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக கடுமையாக உழைத்து பணியாற்றும். அதிமுகவுடன் எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணியில் தொடர்கிறது. அவர்களுடன் சேர்ந்துதான் போட்டியிட போகிறோம்” எனக் கூறினார்.