“தேஜஸ்வி சூர்யா விமானத்தின் கதவை திறக்கவில்லை” அண்ணாமலை விளக்கம்

 
Annamalai

"தேஜஸ்வி சூர்யா படித்தவர்" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய விளக்கம் அளித்துளார். 

Annamalai

இண்டிகோ விமானத்தில் தேஜஸ்வி சூர்யா எம்பியுடன் அண்ணாமலை சென்றபோது விமானத்தின் அவசரக் கதவை தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்துக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதாக  மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார். 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தேஜஸ்வி சூர்யா படித்தவர், விமானத்தின் அவசர கதவை திறக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அந்த கதவில் ஒரு இடைவெளி இருந்தது. அதனைப் பார்த்ததும் தேஜஸ்வி, விமானக் குழுவை அழைத்து கூறினார். நானும் இடைவெளி இருப்பதைப் பார்த்தேன். இதையடுத்து பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. தவறு செய்ததாக அவர் மன்னிப்பு கோரவில்லை. அவர் தவறு செய்யவில்லை. இருப்பினும், அவர் எம்.பி. என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார்” என தெரிவித்துள்ளார்.


இதனை டிவிட்டரில் விமர்சித்துள்ள நடன இயக்குநர் காயத்ரி ரகுராம்,  “தேஜஸ்வி விமான அவசர கதவு திறந்தார், மன்னிப்பு கேட்டார், விமானத்தில் வேறு இருக்கைக்கு அனுப்பிய பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் விளக்கிய பிறகு, இப்போது அண்ணாமலை பல்வேறு விளக்கங்களுடன் வருகிறார். அவர் இண்டிகோ விமானம் மற்றும் குழுவினரை குற்றம் சாட்டுகிறார். இப்போது அண்ணாமலை இண்டிகோ விமானத்தை தரக்குறைப்பு எதிர்மறை விளம்பரம் செய்து, சோதனை செய்யவில்லை என்று இண்டிகோ பணியாளர்களை குற்றம் சாட்டுவதால், இண்டிகோவில் பயணிகள் பறக்க பயப்படமாட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.