ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டி?

 
bjp

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அ.ம.மு.க.வும் தனியாக போட்டியிடுகிறது. 

annamalai

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  கடலூரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடம் அண்ணாமலை இதுகுறித்து கருத்து கேட்டுள்ளார். இதுதவிர பா.ஜனதா மேலிடம் அனுப்பிய ரகசிய குழு ஒன்றும் ஈரோட்டில் சர்வே நடத்தி உள்ளது. இதற்கிடையில் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். எனவே நிலைமைகளை டெல்லி மேலிடம் ஆராய்ந்து வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைவர்கள் இன்று மாலை பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரவுள்ளது குறிப்பிடதக்கது.