இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2 லட்சம் தேங்காய்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன- அண்ணாமலை

 
Annamalai

தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான் டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது.

Image

தொடக்கத்தில் இருந்தே பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்புடன், தேங்காய்,  சலுகை விலையில் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய், நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் தேங்காயையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக விவசாய அணியின் சார்பாக மாநிலம் முழுவதும், காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழக பாஜக விவசாய அணி தலைவர்  ஜி.கே.நாகராஜ் கரூரில் இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

Image

மேலும், தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. அவற்றை மீட்கவும் தமிழகத்தில் 11 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ஆதரிக்கவும் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், சத்துணவில் தேங்காய் பால் போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது. 

இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் தேங்காய்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக பாஜக கோரிக்கையை அரசு பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.